உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வந்த பின், மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வு தேதியும் அறிவித்து இருந்தது.
அதன்படி தமிழகம் முழுதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 5-23 ஆம் தேதி வரையும், 10 ம் வகுப்பு தேர்வு மே 6- 30 ஆம் தேதி வரையும் மற்றும் 11ம் வகுப்பு தேர்வு மே 10- 31 ஆம் தேதி வரையும் நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வை சுமார் 8.85 லட்சம் பேர் விண்ணப்பித்து எழுதினர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கி இருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 80 மையங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 30,000 முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று தலைமை விடைத்தாள் திருத்துனர் எனும் சி.இ.,க்கள் விடைத்தாள்களை திருத்தினர்.
இந்நிலையில் தாள்களில் தவறுகள் இருக்கிறதா மற்றும் தினசரி ஒரு ஆசிரியர் 24 விடைத்தாள்களை திருத்த போதுமான நேரம் உள்ளதா என சோதனை செய்யப்பட்டு இன்று முதல் உதவி விடை திருத்துனர் விடைத்தாள்களை திருத்துவார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்குவதை பொறுத்தவரையிலும் மிகவும் கண்டிப்புடன் இல்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாடங்களை புரிந்து படித்து பதில் எழுதினாலும் மாணவர்களுக்கு முழுமதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட முதல் பொதுத்தேர்வு என்பதால் கடந்த ஆட்சியை விட தேர்ச்சி குறையாமல் பார்த்துக்கொள்ளும் படி ஆசிரியர்களுக்கு திமுக அரசு எச்சரித்துள்ளது.