இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையான்குடி பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான பிராங்கிளின் ஆரோன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வேலை தேடிய ஆரோன் 2 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்து விட்டார். இந்நிலையில் சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலை தேடிய போது தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேறு வழி இல்லாமல் ஆரோன் அந்த வேலையை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பத்தை அனுப்பியும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த ஆரோன் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆரோனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.