சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டம் போன்ற ஓய்வூதிய திட்டங்களின் மூலம் இதுநாள் வரையிலும் 59.45 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் சமூகப்பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரவேற்கப்பட்டு விண்ணப்பங்களில் மாநில அளவில் 1 லட்சத்து, ஆயிரத்து 474 பேர் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு ஓய்வூதியம் பெறும் ஆணை வெளியாகியது. இந்த திட்டங்களுக்கென 2021-22 ஆம் வருடத்திற்கான திருத்திய வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 4,807.56 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்தின் கீழ் திருமணம் ஆகாத பெண்கள், விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினருக்கு ஓய்வூதியம் 600 ரூ வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் அவர்களுக்கு ஓய்வூதியம் 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாயிலாக 1.32 லட்சம் பேர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வருவாய் ஆவணங்கள், வீட்டு வாசலுக்கு திட்டத்தின் கீழ், வருமானம், சாதி சான்றிதழ்களை விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மகளிர் நலன் கருதி “ஆசிட்” தாக்குதலுக்கு ஆளாகும் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஓய்வூதியம் 3,000 வழங்கப்பட்டு வருகிறது. எனினும் நடப்பாண்டு முதல் ஓய்வூதியம் 3,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலம் உட்பட மற்ற நிலங்களை “சர்வே” நடத்த 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் மற்றும் 3 வருடங்களில் டிஜிட்டல் முறையில் வரைபடம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.