போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பர்ராண்டி தீப சுஜிதா விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு பூட்டு போடும் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீசார் காந்தி சிலை, உடுமலை ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது போக்குவரத்து விதிமுறையை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகனங்களுக்கு பூட்டு போடும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 வாகனங்களுக்கு பூட்டு போட்டதோடு, 40 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.