விவசாயிகளுக்கு விதை பண்ணையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விதைப் பண்ணைகளை தேர்வு செய்கின்றனர். இதன் மூலமாக நெல், பாசிப்பயிறு, துவரம்பருப்பு, ஆமணக்கு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களின் விதைகளை உற்பத்தி செய்து லாபம் பெறுகின்றனர். கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விதைப் பண்ணை முறை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் வழங்கும் தரமான விதைகளுக்கு சான்றும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறது. இதில் மத்திய அரசு பரிந்துரை செய்யப்பட்ட விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விதைச்சான்று அலுவலகத்தில் அரசு, அரசு சார்பு, தனியார் மற்றும் விவசாய குழுக்கள் விதை உற்பத்தியாளராக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.
விவசாயிகள் விதைகளை உற்பத்தி செய்தவுடன் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை காலங்களில் வேளாண் சார்ந்த அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்வார்கள். இவர்கள் பயிர் விலகு தூரம் மற்றும் கலப்பு, விதை மூலம் பரவும் நோய் போன்றவற்றை ஆய்வு செய்வார்கள். இதில் தரமான விதைகளுக்கு மட்டுமே சான்று அளிக்கப்படும். மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்ய விதைகளை நேரடியாக வேளாண் துறைக்கே விற்பனை செய்யலாம். அரசால் அனுமதிக்கப்பட்ட விதைகளில் வல்லுநர் விதை, சான்று விதை, ஆதார விதை என 3 வகைகள் இருக்கிறது. இதில் வல்லுநர் விதை என்பது ஆராய்ச்சி நிலையங்கள் , அறிவியல் நிலையங்கள் மற்றும் அரசு விதைப் பண்ணைகளில் விதைச்சான்று அலுவலர்களின் நேரடி பார்வையில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் ஆகும். இந்த விதைகளை விவசாயிகள் தோட்டங்களில் நட்டு உற்பத்தி முடிந்த பிறகு வேளாண்மை துறைக்கு எடுத்து செல்லும் சான்றிதழ் விதை, ஆதார விதை என அழைக்கப்படுகிறது.
இங்கு விதைகள் விற்பனை செய்பவர்களிடம் இருந்து ரசீது, விதைச்சான்று பதிவு, வயலின் வரைபடம் ஆகியவை பெறப்பட்டு பதிவு செய்யப்படும். இந்த பதிவுக்கு 25 ரூபாய் கொடுக்க வேண்டும். இதில் 25 ஏக்கர் வரை ஒரே பண்ணையாக பதிவு செய்து கொள்ளலாம். இதில் மேற்கொள்ளப்படும் கள ஆய்வுக்கு 50 அல்லது 60 ரூபாய் வரை வசூலிக்கப்படும். இங்கு வயல்களில் உற்பத்தி செய்யும் விதைப்பண்ணை முறை லாபகரமானதாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைத்து வகையான விதைகளையும் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வேளாண் சந்தைகள் தரமான விதைகளை தருகிறது எனவும், விதைப் பண்ணை மூலமாக நல்ல லாபம் கிடைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இந்த விதை பண்ணையின் மூலம் அதிக லாபம் கிடைத்தாலும் ஆள் பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஆதார விலையை கூட்டி தர வேண்டும் என விவசாயி முருகேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் கூறுகையில், விதைப் பண்ணை அமைப்பதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் விதை பண்ணை அமைப்பதற்கு 1182 பேர் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வருடம் 1005 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு 2 முதல் 3 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது.