பிரசித்தி பெற்ற அய்யாசாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலங்காரிபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யா சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அய்யா சாமிக்கு பழம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து திருப்பூர், ஈரோடு, கோபி, அந்தியூர், சத்யமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், சேவூர், நம்பியூர், அவினாசி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பனையம்பள்ளி, இரும்பரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாம்பு, தேள், பூரான், பள்ளி, சிலந்தி போன்ற விஷ ஜந்துக்களின் உருவபொம்மைகளை வாங்கி கோவிலில் அமைந்துள்ள தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன்பு வைத்து வழிபட்டனர். இந்த வழிபாடு செய்தால் விஷ ஜந்துக்கள் மனிதர்களை தீண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனையடுத்து திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.