பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வினை நடத்துவதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி பொது தேர்வை நடத்துவதற்கான முழுப்பொறுப்பையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சேர்ந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய தேர்வு கால அட்டவணையை பணிகளின் அறிவிப்பு பலகையும் சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும் ஓட்டுவதற்கு அறிவுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு வினாத்தாள் பாதுகாப்பு மையத்திலும் தேர்வு கால அட்டவணை ஓட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் அனைத்து மையங்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து உரிய பாதுகாப்புடன் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அங்கு போதுமான எண்ணிக்கையில் ரெட்டை பூட்டு அமைப்பு கொண்ட இரும்பு அலுமாரிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு இல்லையெனில் விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து வினாத்தாள்கள் பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
வினாத்தாள்களை பிரிக்காமல் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைத்திருக்க வேண்டும் எந்த ஒரு தேர்வு பணி நியமனமும் விதிமுறைகளுக்கு புறம்பாக இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மேலும் எழுத்துபூர்வமான ஆணைகள் வழியாக மட்டும் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் கண்டிப்பாக வாய்மொழி ஆணைகள் வழங்க கூடாது போன்ற பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.