மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கணவர் முகநூலில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை செட்டிசாவடியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற கணவரும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆனந்த் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மனைவியை ஆனந்த் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் தனது கணவரின் ஃபேஸ்புக்கில் இருக்கும் பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது தனது புகைப்படத்தை ஆனந்த் ஆபாசமாக சித்தரித்து வைத்திருப்பதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த படத்திற்கு அருகில் அந்த பெண்ணின் செல்போன் எண் மற்றும் விபச்சார அழகி என பதிவிடப்பட்டிருந்தது. அதன் பிறகு பலர் செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவர் மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.