பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி தமீம் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. இந்த விடுதியின் மீது கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் ஒரு மேஜை தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வினோத் என்ற வாலிபர் பெட்ரோல் குண்டை வீசியது தெரிய வந்தது.
இந்த வாலிபர் கடந்த 4 வருடங்களாக தமீம் அன்சாரியின் விடுதியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்த வாலிபருக்கு தமீம் அன்சாரி ரூ. 3 லட்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த பணத்தை வினோத்துக்கு கொடுக்காமல் தமீம் அன்சாரி அவரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். அதோடு வினோத் 25-க்கும் மேற்பட்ட அழகிகளை விடுதியில் தங்க வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அழகிகளை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று வினோத் பாலியல் தொழில் செய்துள்ளார். இதனால் அன்சாரியின் விடுதிக்கு வாடிக்கையாளர்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக அன்சாரி வினோத்தை அழைத்து பாலியல் தொழில் செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்தது. அதோடு வினோத்துக்கும், தமீம் அன்சாரிக்கும் இடையே ஒரு பெண் தொடர்பாகவும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த வினோத்தை நேற்று காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.