இரு தரப்பினர் மோதி கொண்டதால் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்ணாக்காணி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி மயில்சாமி தனது மொபட்டில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மயில்சாமியின் மொபட் மீது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான கேசவன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மயில்சாமி காயம் ஏற்பட்டதால் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதோடு, வீடுகளும் சூறையாடப்பட்டன. இதில் படுகாயமடைந்த சிலரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை முயற்சி, வன்கொடுமை, அத்துமீறி நுழைந்து தாக்குதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் 14 பேர் மீது சுல்தான்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பின் பூபதி, மோகன் ராஜ், செந்தில், மாரிமுத்து, பாலகுரு, மயில்சாமி, கணேசன் ஆகிய 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேசவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அறிந்த கேசவனின் உறவினர்கள் தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களையும் கைது செய்தால் மட்டுமே கேசவனின் உடலை வாங்குவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு கேசவனின் உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.