விபத்து வழக்கில் நஷ்டஈடு கொடுக்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருடைய மனைவி குமாரி (45), மகன் ராமச்சந்திரன்(25). ராமச்சந்திரனின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை 30ஆம் தேதி அன்று காரில் தாய் குமாரியுடன் அவர் விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது சோழகனூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே திருப்பதி நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் குமாரியும், ராமச்சந்திரனும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து காணை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து நஷ்ட ஈடு கேட்டு ஆறுமுகம் விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட குமாரியின் குடும்பத்திற்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ 15,60,000 கொடுக்கவேண்டும் என்று கடந்த 2019 -ஆம் வருடம் ஆகஸ்ட் 30ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதனால் மனுதாரர் ஆறுமுகம் சார்பாக வக்கீல் கல்பட்டு ராஜா கடந்த 2020-ஆம் வருடம் நவம்பர் 24 ஆம் தேதி அன்று மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன் பாதிக்கப்பட்ட குமாரின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ 22, 91,850 கொடுக்க வேண்டும்.
இந்தத் தொகையை குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கொடுக்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 2022ஆம் வருடம் பிப்ரவரி 11 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். இருந்தபோதிலும் அரசு போக்குவரத்து கழகம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குமாரியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தொகை கொடுக்காததால் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடலூருக்கு செல்ல இருந்த அரசு பேருந்தை நீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் விசுவநாதன் ஜப்தி செய்துள்ளார்.