விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யபட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வெடால் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான மனோகர். இவர் வெடாலிலிருந்து செஞ்சிக்கு வந்த தனியார் பேருந்தில் கடந்த 2013 ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி அன்று பயணம் செய்துள்ளார். அப்போது பென்னகர் அருகில் வரும்போது டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் படுகாயம் அடைந்த மனோகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நஷ்ட ஈடு கேட்டு செஞ்சிக் கோர்ட்டில் வக்கீல் கதிரவன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரூபாய் 4,29,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த பேருந்து நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. எனவே இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்ற நீதிபதி நளினகுமார் விசாரித்து, அந்த தனியார் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
உடனே செஞ்சி சார்பு நீதிமன்ற அமீனாக்கள் சுமதி, மீரா ஆகியோர் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வந்து அந்த தனியார் பேருந்தை ஜப்தி செய்து நிதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த தனியார் பஸ் விபத்து ஏற்படும்போது இன்சூரன்ஸ் செய்யாமல் இருந்தது.