சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் ஆலாங்கடவு பிரிவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்தில் சிக்கி நின்றுள்ளது. அந்த லாரியில் ரேஷன் அரிசி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அருண் ராஜ் மற்றும் கார்த்திகேயன் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் தேனி மற்றும் திண்டுக்கல் பகுதியில் இருந்து மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரியில் இருந்த மூட்டைகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டது உறுதியானது. இதனையடுத்து அருண் ராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 20 டன் எடையுள்ள அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.