கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சூர்யா தனது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா 60 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.