விபத்தில் முதியவர் உயிரிழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திகுளம் ஆதிதிராவிடர் தெருவில் கருப்பண்ணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி துத்திகுளம் தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதியினர் மீட்டு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து கருப்பண்ணனின் உறவினர்கள் சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையறிந்த அவரது உறவினர்கள் உடலை வாங்க சென்ற போது காவல் துறையினரின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் துத்திகுளத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரே சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.