விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி கலிய மூர்த்தி(50). இவர் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் 18-ம் தேதி கெடார் பேருந்து நிறுத்தம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து மோதியதில் கலியமூர்த்தி பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கெடார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கலியமூர்த்தியின் மனைவி வளர்மதி கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட கலியமூர்த்தி குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக நஷ்ட ஈடு ரூபாய் 8,13,700 கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர் வளர்மதி சார்பாக வக்கீல் பன்னீர்செல்வம் 2021- ம் ஆண்டு டிசம்பர் 23- ம் தேதி அன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன் பாதிக்கப்பட்ட கலியமூர்த்தி குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ10 லட்சத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென்றும் அந்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு தொகையை கொடுக்காததால் நேற்று முன்தினம் காலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல இருந்த அரசு பேருந்தை நீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் ராஜு ஜப்தி செய்துள்ளார். அப்போது வக்கீல் பன்னீர்செல்வம், மனுதாரர் வளர்மதி ஆகியோர் இருந்தார்கள். அதன்பின் அந்தப் பேருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.