ஷார்ஜாவிலிருந்து லக்னோவிற்கு பயணித்த இந்திய விமானம் ஒன்று பயணி ஒருவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டதால் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ ஏர்லைன்ஸிற்கு உரிய 6e1412 என்ற பயணிகள் விமானம் சார்ஜாவில் இருந்து ஈரான் வழியாக லக்னோவிற்கு சென்று கொண்டிருந்தபோது உடனடியாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. அதாவது இந்த விமானத்தில் இருந்த Habibur Rahmaan என்ற 67 வயதுடைய பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானி உடனடியாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார். எனவே கராச்சி விமான நிலையத்தில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் உடனடியாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் Habibur Rahmaan விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தான் மருத்துவ குழு மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து மருத்துவ சட்ட முறைகள் முடிவடைந்ததும் விமானம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. இதே போல் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சவுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் விமானம் அவசரமாக பாகிஸ்தானில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.