டெல்லியில் உள்ள உத்தமநகரில் அங்கிங் குமார் ஜா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் விமானப்படைக்கு தேர்வானதால் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். அந்த பயிற்சியின் போது வாலிபர் விதிமுறைகளை மீறியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த வாலிபர் கடந்த 21-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது வாலிபரின் அறையிலிருந்து 7 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் உயர் அதிகாரிகள் 6 பேர் தன்னை வேண்டுமென்றே துன்புறுத்தியதாக எழுதப்பட்டிருந்தது.
அதோடு வாலிபரின் பெற்றோர்கள் தன்னுடைய மகன் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததாகவும், கல்லூரி நிர்வாகத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது சரியான முறையில் பதில் அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வாலிபரின் தற்கொலை வழக்கில் கர்நாடகா காவல் துறையினர் உயர் அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.