கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் உள்ள விமான ஊழியர்கள் அனைவரும் டயப்பர்கள் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து நாட்டு அரசுகளும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகின்றன. அதன்படி கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளுக்கு செல்லும் விமானங்களில், விமான ஊழியர்கள் அனைவரும் டயப்பர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கழிவறை மூலமாக கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.