சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில், தனியார் நிறுவனம் ஒன்று விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது, விமான பயணிகளின் உடமைகளை கையாள்வது போன்ற தரைதள பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலம் முடிவடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக தரைதள பணிகளை ஒரு நிறுவனத்தை வைத்து சமாளிப்பது கடினமானதாக இருக்கிறது. அதனால் இந்திய விமான நிலைய ஆணையகம் சென்னை விமான நிலையத்தில் மேலும் கூடுதலாக 2 தனியார் ஏஜென்சிகளை நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் போன்ற விமான நிலையங்களில் பணி செய்து வரும் 2 தனியார் ஏஜென்சிகளே சென்னை விமான நிலையத்திலும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய ஏஜென்சிகளில் திறமையான பணியாளர்கள் மற்றும் அதிநவீன கருவிகள் இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் தரைதளப் பணிகள் இனிமேல் துரிதமாக நடைபெறும் எனவும் விமான பயணிகளின் உடமைகளை கையாள்வதும் அதிவேகமாக நடக்க இருப்பதால் இனிமேல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய இரண்டு ஏஜென்சிகளால் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் புதிதாக வேலைக்கு வருபவர்கள் பயிற்சிகள், பாஸ்கள், போலீஸ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்ற அனைத்து நடைமுறைகளும் முடித்து 2023 ஆம் வருடம் ஜனவரி மாத இறுதிக்குள் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.