பெங்களூரு கேம்கேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 2வது முனையத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க டிரோன்களைப் பயன்படுத்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த காரணங்களுக்காக டிரோன்களைப் பயன்படுத்த விமானநிலைய அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், இன்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதி கிடைத்து இருப்பதோடு, விமானநிலைய நிர்வாகம் கூடுதலாக மத்திய உள் விவகாரத்துறை அமைச்சகத்திடமும், மத்திய ஆயுதப்படையிடமும் அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த அனுமதி பெற்றபின் அது ஒருமாத காலத்துக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதற்குள் எப்பணிக்காக டிரோன்கள் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டதோ, அந்தப் பணிகளை முடிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.