பெங்களூர் தேவனஹள்ளி அருகில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இங்கு இருந்து டெல்லி, சென்னை, தூத்துக்குடி, ஐதராபாத், உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நிலையம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 3:30 மணியளவில் போன் அழைப்பு வந்தது. அப்போது போனில் பேசியவர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
அத்துடன் அவரது பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்பின் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விமான நிலையத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். மேலும் மோப்பநாய்கள் கொண்டு வரப்பட்டு விமான நிலையம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆகவே இது போலியான மிரட்டல் என்று தெரியவந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் பயணிகள் பெருமூச்சுவிட்டனர்.
அதே நேரம் வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சுபாஷிஷ் குப்தா என்ற நபரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் அவர் தன் தங்கையின் கணவரை பழிவாங்குவதற்காக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது. சுபாஷிஷ் குப்தாவின் தங்கையை அவரது கணவர் விவாகாரத்து செய்ய இருப்பதாக கூறி இருக்கிறார். இதன் காரணமாக அவர் மீது சுபாஷிஷ் குப்தா கடும் கோபமடைந்துள்ளார். இதனால் அவரை மாட்டி விடுவதற்காகவே அவர் பெயரைச் கூறி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட சுபாஷிஷ் குப்தாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.