விமான நிலையத்தில் வேலை வாங்கி குடுப்பதாக கூறி 3 லட்சம் ரூபாயை ஏமாற்றிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகின்றார். டிப்ளமோ படைத்த இவர் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்கு விமான நிலையத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை நன்றாக தெரியும் என்று ரஞ்சித்குமாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரஞ்சித்குமார் அவர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து முத்துக்குமார் ரஞ்சித்குமாரை மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து சென்று குமார் என்பவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது ரஞ்சித் குமாரிடம் இருந்து அவருடைய படிப்பு சான்றிதல் நகல்களை வாங்கி கொண்டனர். அதற்குப்பின் 2 மாதங்கள் கழித்து ரஞ்சித்குமாரிடம் போலி முத்திரை பதித்த விமான நிலைய ஆணையத்தை காண்பித்து சென்னை விமான நிலையத்தில் வேலை கிடைத்து விட்டதாக கூறி மேலும் 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் பணம் வாங்கி கொண்டு 1 1/2 வருடங்கள் ஆகியும் ரஞ்சித்குமாருக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனையறிந்த ரஞ்சித்குமார் போடி காவல் நிலையத்தில் முத்துகுமார் மற்றும் குமார் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.