சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் புளியமரத்தின் மீது மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலையூர் மல்லிகை நகரில் முகமது இத்தீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் இளநீரை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக தனது மனைவி ஜரினா பானுவுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் சரக்கு வேன் இளையான்குடி-சிவகங்கை புதுக்குளம் கிராமம் வழியே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள புளிய மரத்தின் மீது வேகமாக மோதியது.
அதில் ஜரினா பானு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதில் அவரது கணவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.