திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி உமா ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹெட்செட் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கோத்தான்டபட்டி- வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.