கடையை சேதப்படுத்திய 5 மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராயநல்லூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சிற்றுண்டி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரத்தினவேல் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது நாட்டுவாய்க்கால் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு வந்து கடனுக்கு போண்டா, பஜ்ஜி தருமாறு ரத்தினவேலிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் ரத்தினவேல் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்தையும் உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த வர்த்தக சங்கத்தினர் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குற்றவாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.