வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஆட்சியர் கூறியதால் கடையடைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் சமாதானம் செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வியாபாரிகள் மற்றும் ஓட்டம் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமமூர்த்தி கட்டுமான பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தித்து வரும் இடர்பாடுகளை ஆட்சியரிடம் விளக்கினார்.
அப்போது ஆட்சியர் திடீரென ஆவேசப்பட்டு வியாபாரிகள் சங்க தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி கூறியதால் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள். பின் ஆட்சியர் வியாபாரி சங்க பிரதிநிதிகள் மூன்று பேரை மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார். இந்த மூன்று பேரில் ஒருவராக வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி சென்ற பொழுது ஆட்சியர் மீண்டும் ஆத்திரமடைந்து பேசினார். இதனால் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியர் தங்களை அவமானப்படுத்தி விட்டதாகவும் இதனால் நாளை கடை அடைப்பு செய்யப் போவதாக கூறினார்கள்.
இதன் விளைவாக முழுக்கடை அடைப்பு போராட்டம் நடத்துவதற்கான நோட்டீஸ் அச்சடிக்கும் பணியில் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள். மேலும் இது இணையத்தில் பரவியது. இது பற்றி தகவல் அறிந்த ஆட்சியர் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்தார். அதில், தற்போது பள்ளிகொண்ட நகர மக்களின் நலனுக்காகவே நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். மழை நீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவு விடுகின்றேன் என கூறிவிட்டு சென்றார். இதனால் கடையடைப்பானது வாபஸ் பெறப்பட்டது.