யானை தாக்கியதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை சாலையில் சுற்றி திரிந்து பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் வனத்துறையினர் கூச்சலிட்டு யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானை கோவில் வளாகத்திலேயே அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது.
அப்போது லாரி ஓட்டுநர்களும், வனத்துறையினரும் யானையை விரட்ட முயற்சி செய்ததால் கோபமடைந்த யானை அவர்களை நோக்கி ஓடிவந்தது. இந்நிலையில் யானையிடமிருந்து தப்பிப்பதற்காக தலைதெறிக்க ஓடிய ஒருவர் கால் தவறி கீழே விழுந்தார். அவரை யானை காலால் மிதித்து கொன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனை அடுத்து அந்த நபரின் சட்டை பையில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை எடுத்து பார்த்த போது அவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான சீனிவாஸ்(33) என்பது தெரியவந்தது.
இவர் லாரியில் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் நோக்கி சென்றுள்ளார். இரவு நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டதால் சீனிவாஸ் பண்ணாரி அம்மன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு காலையில் செல்லலாம் என இருந்துள்ளார். பின்னர் யானை வகரட்ட முயன்ற போது சீனிவாஸ் இறந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.