முன்பு ஒரு காலத்தில் விறகு அடுப்பில் தான் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இதனையடுத்து பெண்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சிலிண்டர் இலவச சிலிண்டர் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் கிராமப்புறங்களில் கூட தற்போது விறகு அடுப்பு போய் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இவ்வாறு சமையல் சிலிண்டர்களை கடவுளின் வரமாக பெண்கள் பார்த்த காலம் போய் தற்போது அது சாபமாக மாறி விட்டது. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பாக 200, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்களின் விலை தற்போது 1000 ரூபாய் நெருங்கி விட்டது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ரூ.2000 க்கு வந்து விடும் போல அந்த அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இது சிறிய பிரச்சினையாக தோன்றலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் செலவு செய்வது என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இது சாதாரண விஷயமல்ல. தற்போது சிலிண்டர் விலை உயர்வு மட்டும் பிரச்சினை கிடையாது .அரிசி காய்கறி, பருப்பு என அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது.
இதனால் மக்கள் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடனில் சிக்கி தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதுமட்டுமின்றி குடும்ப செலவை ஈடுகட்டுவதற்காக இல்லத்தரசிகளும் வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையேற்றம், போக்குவரத்து லாஜிஸ்டிக்கஸ் உள்ளிட்ட செலவுகள் தான் காரணம் என்று அரசு தரப்பில் சொல்லப் படலாம்.
ஆனால் அந்த விலை உயர்வை சாமானிய மக்களால் சமாளிக்க முடியுமா? என்று அரசு பார்க்க வேண்டும். எனவே ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை உயர்த்துவது போல அந்த சிலிண்டரை வாங்கும் மக்களின் சம்பளமும் உயர்த்தப்படுகிறதா? அதிகரிக்கும் செலவுக்கு ஏற்ப வருமானம் அதிகரித்தால் தானே சமாளிக்க முடியும் என்பது சாமானிய மக்களின் கேள்வியாக உள்ளது. சிலிண்டர் விலை பிரச்சனை மட்டுமின்றி பால் விலை, எண்ணெய், காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே போவதால் சாமானிய மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கான உதவிகள் அரசு தரப்பில் இருந்து கிடைக்க வேண்டும் என்று பரவலான மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல தேர்தல் சமயங்களில் மட்டும் சிலிண்டர் விலையை குறைக்காமல் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் வேண்டும். வருமானத்தை உயர்த்துவது சிரமம் தான். இருந்தாலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.