பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி விராட் கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வந்த விராட் கோலி தற்போது பார்மில் இல்லாமல் தவிக்கிறார். கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சதம் அடிக்காமல் இருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியின் போது கோலி சதம் அடித்தார். அதன் பின் இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் விராட் கோலி.. குறிப்பாக கடந்த சில தொடர்களில் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறிய கோலி சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ஓய்வின் காரணமாக வெளியில் இருந்தார்.. தற்போது இந்திய அணியில் நிறைய இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், விராட் கோலி இனிவரும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார், இல்லையெனில் அவருக்கு இந்திய அணியில் இடம் கேள்வி குறிதான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
இருப்பினும் விராட் கோலி மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக பிசிசிஐ அவருக்கு ஆசியக் கோப்பையில் விளையாட வாய்ப்பு வழங்கியுள்ளது. இதை அவர் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் அவர் ஜொலித்தார் என்றால் உலக கோப்பையில் இந்திய அணி மேலும் வலுவடையும் என்பது தான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.. இதற்கிடையே விராட் கோலியின் ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. சிலர் கோலியின் பார்ம் அவ்வளவுதான் என்றும், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துக்களை கூறி வந்தாலும், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி விராட் கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். அதாவது அடிக்கடி இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அப்ரீடியிடம் ரசிகர்கள் கேள்வி கேட்க, அதற்கு அவர் பதில் அளிக்கும் பழக்கத்தை கொண்டவர்.. அதேபோல் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் விராட் கோலியின் பேட்டிங் இப்படி மோசமாக இருக்கிறது, எனவே அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று ஒரு கேள்வியை முன் வைத்தார். இதற்கு அப்ரிடி அது அவர் கையில் தான் இருக்கிறது. நிச்சயமாக கடினமான நேரத்தில் தான் நாம் நல்ல வீரரை கண்டுபிடிக்க முடியும் என்று சுவாரஸ்யமான பதிலை கூறியிருக்கிறார்.
It’s in his own hands.
— Shahid Afridi (@SAfridiOfficial) August 21, 2022
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த ஆசிய கோப்பையில் விராட் கோலி தனது பார்மை மீட்டெடுப்பார் என்று பலரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், அப்ரீடியும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விராட் கோலி டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கியமான வீரராக இருப்பார் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.