விராட் கோலியின் ஒய்வு குறித்து பேசிய ஷாஹித் அப்ரிடிக்கு இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார்..
ஆசியக்கோப்பை தொடரில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு டக் அவுட்டுக்கு பிறகு, விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் 122 ரன்களை எடுத்தார், 1020 நாட்களுக்கு பின் அவர் சதமடித்து பார்முக்கு வந்தார். அந்த மகிழ்ச்சியை ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாடினர், கேப்டன் ரோஹித் ஷர்மா 2022 ஆசியக் கோப்பையின் கடைசி போட்டியில் ஓய்வெடுத்ததால் கே.எல் ராகுலுடன் தொடக்க வீரராக பேட்டிங்கைத் தொடங்கிய கோலி ஆடி 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்தார். இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கோலிக்கு முதல் சதமாகும்.
கோலி 2022 ஆசியக் கோப்பையில் 147.59 ஸ்டிரைக் ரேட்டில் 5 போட்டிகளில் 286 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருக்கிறார். விராட் கோலியின் 71வது சதத்தின் மூலம் பார்முக்கு திரும்பியதால், டி20 உலகக்கோப்பை தொடரிலும் அதனை அப்படியே தொடர்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி 34 வயதான கோலிக்கு ஓய்வு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அஃப்ரிடி சாமா டிவியிடம் கூறியதாவது “விராட் விளையாடிய விதம், அவர் தனது வாழ்க்கையின் தொடக்கம், அவர் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கு முன்பு போராட்டங்களை சமாளித்து கடினமாக உழைத்தார். அவர் ஒரு சாம்பியன் மற்றும் நீங்கள் ஓய்வு பெறும் போது ஒரு நிலை வரும் என்று நான் நம்புகிறேன். பார்மில் இல்லாதபோது நீங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. அதற்கு பதிலாக, நீங்கள் புகழின் உச்சத்தில் (பார்மில்) இருக்கும்போது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், இருந்தாலும் அது எப்போதாவதுதான் நடக்கும். குறிப்பாக ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த மிகக் குறைவான வீரர்களே அந்த முடிவை எடுக்கிறார்கள், ஆனால் விராட் ஓய்வை செய்யும்போது, அவர் ஒரு நல்ல வழியில் செய்வார் என்று நான் உணர்கிறேன், மேலும் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கியதைப் போலவே தனது வாழ்க்கையையும் ஸ்டைலாக முடிப்பார்” என்று அவர் கூறினார்.
ஷாஹித் அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் விமர்சித்து பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே போல இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அன்புள்ள அப்ரிடி, சிலர் ஒருமுறை மட்டுமே ஓய்வு பெறுகிறார்கள், எனவே தயவு செய்து விராட் கோலியை இதிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்..
ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் போது பலமுறை ஓய்வை அறிவித்து பின் மீண்டும் அதனை வாபஸ் வாங்கியவர் தான் அப்ரிடி.. அதாவது அப்ரிடி முதல் டெஸ்ட் ஓய்வை 2006 ஆம் ஆண்டு அறிவித்து பின் மீண்டும் இரண்டு வாரங்களில் திரும்பப் பெற்று விட்டார்.. இதையடுத்து 2010 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த அப்ரிடி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, பின்னர் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தான் கேப்டனாக செயல்பட்டார்..
பின்னர் அதில் வெற்றி பெறாத காரணத்தால் அந்த உலகக் கோப்பை தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தியதன் பேரில், அதனை திரும்ப பெற்று 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கினார்.. பின்னர் ஒரு வழியாக 2017 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதைதான் அமித் மிஸ்ரா குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். பலமுறை நீங்கள் ஓய்வை அறிவித்து பின் வாபஸ் வாங்கி வந்த நீங்கள் விராட் கோலி பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என்பது போல இவரது பதிவு அமைந்துள்ளது.
Dear Afridi, some people retire only once so please spare Virat Kohli from all this. 🙏🏽 https://t.co/PHlH1PJh2r
— Amit Mishra (@MishiAmit) September 13, 2022