டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி பேட்டிங்கைத் தொடங்குவது அணிக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஹன் கவாஸ்கர் கூறியுள்ளார்..
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்ததால் மனதளவில் சோகத்தில் இருந்தார் என்பது தான் உண்மை.. இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகி பார்மை மீட்டெடுக்க முயன்றார்.. ஆனால் கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக ஆடும்போதும் அவரால் சிறப்பாக ஆட முடியவில்லை.. இதனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் என்றெல்லாம் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. ஒருபுறம் எதிர்ப்பு வந்தாலும் ஆதரவும் கோலிக்கு கிடைத்தது.. இதனால் மனம் தளராமல் இருந்தார் கோலி.. இந்நிலையில் தான் பழைய ரன் மெஷின் கோலி மீண்டும் வந்தார்..
நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் பழைய கோலியின் ஆட்டத்தை பார்க்க முடிந்தது.. ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி வந்த கோலி 2 போட்டிகளில் அரைசதம் கடந்து மெல்ல மெல்ல பார்முக்கு மீண்டு வந்தார்.. அதன்பின் கடைசி போட்டியில் கியரை மாற்றி விட்டார்..ஆம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது முதல் சதமாகும். ஒட்டுமொத்தமாக இது 71 ஆவது சதத்தை பதிவு செய்த கோலிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்தது.. விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தான் சதம் அடித்து இருந்தார்.. எனவே 1020 நாட்களுக்கு பிறகு சதமடித்த கோலியை ரசிகர்கள் பாராட்டினர்.. இந்நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.. ஆசிய கோப்பையில் சொதப்பியிருந்தால் டி20 கோப்பையில் இடம்பிடிக்காமலும் போக வாய்ப்பிருந்த நேரத்தில் நாயகன் மீண்டும் வர என்று கெத்தாக வந்துள்ள கோலி இதே பார்மை டி20 உலகக்கோப்பையிலும் தொடருவார் என்றே நம்பலாம்..
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஹன் கவாஸ்கர் கூறுகையில், டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி பேட்டிங்கை தொடங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். பாருங்கள், விராட் ஓப்பனிங் செய்ய வேண்டுமா, இது ஒரு சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். “நீங்கள் அவருடைய (கோலி) T20 ரன்களை பாருங்கள், அவை மிகச் சிறந்தவை. அவர் சராசரியாக 55-57 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் சுமார் 160” என்று ரோஹன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “அவரது கடைசி இன்னிங்ஸ்சில் மீண்டும் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார்.எனவே, இது நிச்சயமாக இந்திய அணிக்கு ஒரு பெரிய தேர்வாகும், ”என்று கூறினார்.