எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து அவர் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி தன்னுடன் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து 10 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யாவின் பெற்றோர் ஏற்க மறுத்ததால் அசோக் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவின் பெற்றோர் தம்பதியினரை தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அழைத்தனர்.
இருவரும் சௌந்தர்யாவின் வீட்டிற்கு செல்ல பெண்ணின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் நன்றாக உபசரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சௌந்தர்யா தனது பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று அசோக்கிடம் கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவி இருவரையும் சௌந்தர்யாவின் வீட்டில் நேற்று அழைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அசோக், சௌந்தர்யா மற்றும் அசோக்கின் தம்பி மற்றும் நண்பர்கள் சேர்ந்து சௌந்தர்யாவின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு 10க்கும் அதிகமான அடியாட்கள் தம்பதியினரையும் உடன் வந்த நண்பர்களையும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
சௌந்தர்யாவை கட்டாயமாக வீட்டிற்குள் பூட்டி வைத்தனர். இந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்ட அசோக் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அசோக் தனது மனைவியை மீட்டுத் தரும்படி கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.