Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விருப்பமுள்ளவர்கள் இப்படி ஓட்டு போடலாம்… வீடு தேடி வரும் அலுவலர்கள்… முன்னேற்பாடு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போட விரும்பும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களிடம் தபால் வாக்குகளை சேகரிப்பதற்காக 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் தபால் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதனால் தபால் மூலம் வாக்கு செலுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் தபால் வாக்குகளை சேகரிப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டது. மாற்று திறனாளிகள், முதியவர்கள் என 37 ஆயிரம் பேரிடம் திண்டுக்கல்லில் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று விருப்பத்தை தெரிந்து கொண்டனர். அதில் 781 மாற்றுத்திறனாளிகள், 1,854 முதியவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 635 பேர் தபால் வாக்கு செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்த வாக்குகளை சேகரிப்பதற்கு மொத்தம் 32 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஒரு நுண் பார்வையாளர், இரண்டு தேர்தல் அலுவலர்கள், ஒரு வீடியோ கேமராமேன், ஒரு போலீஸ்காரர் என ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர். தபால் வாக்கு செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை இந்த குழுவினர் நேரில் சென்று தபால் வாக்கு சீட்டுகளை கொடுப்பார்கள். அதன்பின் வீடியோ கேமராவில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் தபால் வாக்கு செலுத்துவது பதிவு செய்யப்படும். இந்த பணி மார்ச் 29-ம் முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |