கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் இடம்பெற்ற கஞ்சாப்பூ கண்ணாலே பாடல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தை தொடர்ந்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் இணையதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பாடல் போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் இது குறித்து இப்பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் மணிமாறன் விளக்கம் அளித்து இருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, கஞ்சா பூ பாடல் வரிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் அதே நேரத்தில் மயக்கம் தன்மைக்காக பெண்களை கஞ்சாபூவுடன் ஒப்பிட்டதாகவும் கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார். இருப்பினும் என்னுடைய வார்த்தைகள் தவறானது தான் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.