தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தொழிலதிபரும், நடிகருமான சரவணன் கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பிரைடல் ஸ்டுடியோ நிறுவனத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழா முடிவடைந்த பிறகு சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய அடுத்த படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வரும். நான் அரசியலுக்கு வரலாமா? வர வேண்டாமா? என்பதை மக்களும் மகேசனும் தான் தீர்மானிக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்த தகவலால் சரவணன் கூடிய விரைவில் அரசியலில் களமிறங்கப் போகிறாரா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி வெளியானது தி லெஜன்ட் திரைப்படம் 800-க்கும் அதிகமான தியேட்டர்களில் பான் இந்தியா மொழி படமாக ரிலீஸ் ஆன நிலையில், தி லெஜண்ட் படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பல்வேறு விதமாக ட்ரோல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.