டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்தபட்ச பயணசீட்டு கட்டணத்தை அதிகரிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அமைச்சரும் பயண சீட்டு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாணவர்களுக்கான குறைந்தபட்ச சலுகை கட்டணத்தை ரூபாய் 6ஆகவும், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூபாய் 12ஆகவும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தற்போது உள்ள கிலோ மீட்டர் கட்டணத்தை 90 பைசாவிலிருந்து ரூபாய் 1.10ஆக உயர்த்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், விரைவில் அரசு குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை உயர்த்தும் என்று உறுதி அளித்துள்ளார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.