நடிகர் ரஜினி விரைவில் நலம் பெற மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ரஜினிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்ததால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி திடீரென அனுமதிக்கப்பட்டார். ரஜினியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த பலரும் அவர் மீண்டு வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் வைரலாகி வருகிறது. “விரைவில் நலம் பெறுங்கள் சூர்யா, அன்புடன் தேவா”என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மம்மூட்டி பதிவிட்டுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி மம்மூட்டி கூட்டணியில் வெளியான படம் தளபதி. அதில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டியும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தனர். அந்தப் பெயரை முன்வைத்து மம்மூட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதால் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.