திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தீர்க்கமான நடவடிக்கை அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16 சதவீதத்திலிருந்து 3.O8 சதவீதமாக குறைவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில் தற்போது அது மாற்றப்பட்டு உள்ளது. இக்கட்டான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் பல நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முதலாம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது, இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரிவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.