நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதால் 4-வது அலை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மொபைல் போன் சந்தாதாரர்கள் மற்றும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்திடம் இருந்து கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன்களை நிறுத்துமாறு மத்திய தொலைத் தொடர்புக்கு கோரிக்கைகள் வந்துள்ளது. மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு, மத்திய தொலைதொடர்பு துறை கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனை கைவிடுமாறு அண்மையில் கடிதம் எழுதியது.
அந்த கடிதத்தில், “கிட்டதட்ட 21 மாதங்களாக செயல்பாட்டில் இருந்து வரும் கொரோனா காலர் டியூன் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தினை நிறைவேற்றியுள்ளது. எனவே தற்போது அதற்கான அவசியம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கொரோனா காலர் ட்யூன்களை ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் கொரோனா காலர் ட்யூன் ரத்தாக வாய்ப்புள்ளது.