BSNL நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுக்க BSNL நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக BSNL நிறுவனம் 2019 ஆண்டு வாக்கில் 4ஜி சேவைகளை வெளியிட திட்டமிட்ட நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் வழங்கும் உபகரணங்களை கொண்டு தான் 4ஜி சேவைகளை வெளியிட வேண்டும் என அரசு அறிவித்ததால் இந்தியாவில் BSNL நிறுவனத்தின் 4ஜி வெளியீடு தாமதமானது. மேலும் 4ஜி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் அறிக்கையை BSNL வெளியிட்டது.
இந்த கோரிக்கைக்கு டிசிஎஸ் நிறுவனம் மட்டுமே பதில் அளித்தது. இந்நிலையில் BSNL 4ஜி சேவைக்கான சோதனைகள் துவங்கியதால் BSNL மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து நாடு முழுக்க 4ஜி சேவையை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிறுவனங்கள் இடையிலான ரூ. 16 கோடி மதிப்பில் கையெழுத்தாக உள்ள ஒப்பந்தம் தொடர்பான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலை நிர்ணயம் மற்றும் சலுகைகளை வழங்குவது பற்றி இரு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.