லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து முகமது தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக விறகு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக முகமதுவின் மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முகமதுவின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான காயாம்பு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.