தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26,26,515 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.மேலும் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விற்பனையாகாமல் கோடி கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறும் போது, தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததைதொடர்ந்து, விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் எங்களிடம் தற்போது கையிருப்பில் இருக்கிறது. அதனால் (கோவிஷீல்டு) தடுப்பூசி தயாரிக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியே நிறுத்திவிட்டோம்.
மேலும் விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள் எங்களிடம் இருக்கிறது. இந்த தடுப்பூசிகளை யாராவது இலவசமாக எடுத்துக்கொள்ளவும் நான் முன்வந்துள்ளேன். ஆனால், இது குறித்து இதுவரை எந்த விதமான நேர்மறையான பதில்களும் வரவில்லை’ என தெரிவித்துள்ளார்.