வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் கால் டாக்சி கார்கள் பெரியார் நகரில் 80 அடி ரோட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பேசியதாவது, பெட்ரோல், டீசல், வாகன உதிரி பாகங்களின் விலை அதிகமாகிவிட்டது. ஆனால் தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் குறைவான வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்சமயம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 95 வசூலிக்கப்படுவதை ரூ 110 ஆக உயர்த்த வேண்டும். மேலும் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பாக விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 400 கால் டாக்சிகள் இயங்குகிறது. அதில் சுமார் 109 கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார்.