தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகப்படியாக சாகுபடி செய்யும் பூக்களை தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் வாங்கியதாலும், முகூர்த்த தினங்கள் வந்ததாலும் பூக்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புயல் எதிரொலியாக ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது.
அதே நேரம் சாமந்திப் பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ சாமந்தி 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து வியாபாரிகள் சாமந்தி பூக்களை வாங்குவதற்கு வராததால் விவசாயிகள் ஒரு டன் எடைக்கும் மேலான பூக்களை பேருந்து நிலையத்திலேயே விட்டு சென்றனர். பின்னர் நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் மூலம் பூக்களை லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தியுள்ளனர்.