தனியார் செயலி மூலம் வாலிபரிடம் 2 மோசடி நடந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சுபாஷ்நகரில் வசித்து வரும் காமேஷ்முருகன்(24) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு யூடியூப் சேனல் ஒன்றை வைத்து வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு அந்த செயலியை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிலிருந்து அவருக்கு பணம் கிடைத்ததால் மேலும் கூடுதல் பணம் கிடைக்க வேண்டுமென சுமார் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் முதலீடு செய்த தொகைக்கான வட்டித்தொகை அந்த செயலியில் வந்துள்ளது. எனவே அதிலிருந்து காமேஷ்முருகன் தனது வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்ற முயன்றுள்ளார். ஆனால் 2 மாத காலமாக முயன்றும் அந்த பணத்தை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டது காமேஷ்முருகனுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காமேஷ்முருகன் முதலீடு செய்த வங்கி கணக்கை முடக்கி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.