தமிழக கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி. மலையாளம் பேசும் மக்கள் இங்கு கணிசமாக உள்ளன. இந்தப் பகுதியின் முக்கிய தொழில்களாக ரப்பர் விவசாயம், முந்திரி தொழில் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளன. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதய எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி. விளவங்கோடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,47,495 ஆகும்.
ரப்பருக்கு போதிய விலை கிடைக்காமல் தவிப்பதாக ரப்பர் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் 500 முந்திரி ஆலைகள் இருந்த நிலை மாறி தற்போது 150க்கு குறைவான ஆலைகளே செயல்படுகின்றன. அதிலும் பெண் தொழிலாளர்களுக்கு வாரம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. நெய்யாறு தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதேபோல் அரசின் கடுமையான கட்டுப்பாடுகளால் செங்கல்சூளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விளாத்துறை-விளவங்கோடு இடையே தாமிரபரணி ஆற்றை கடக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
குழித்துறை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி சீரமைக்க வேண்டும் என்றும், அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்கள் வலியுறுத்துகின்றனர். குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர். விரிகோடு ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிதறால் மலைக் கோவிலுக்கு செல்ல விச் அல்லது ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.