விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் அதிகாரிகளுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் பகுதியில் பாசன வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது. இதன் மூலம் கொடைக்காரமுலை, பழைய பாளையம், நல்லூர், ஆரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இது கடல் நீர் புகாமல் இருப்பதற்காக கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பழைய பாளையம் பகுதியில் உள்ள பாசன வடிகால் வாய்க்காலில் கடல் நீர் அதிக அளவில் கலக்கிறது. இந்த வடிகாலில் இருந்து பாசன வசதி பெரும் விளைநிலங்களில் கடல் நீர் கலப்பதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் தடுப்பணையை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.