விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து 1,000 வாழை மரங்கள். தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை நாசமாக்கியுள்ளது.
பூதப்பாண்டி அருகே இருக்கும் உடையார்கோணம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கின்ற நிலையில் இங்கு வன விலங்குகள் புகுந்து அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து ஆயிரம் வாழைகளை பிடுங்கி எரிந்து நாசமாக்கியது. மேலும் அருகில் இருக்கும் தென்னந்தோப்புக்குள் புகுந்து 18 தென்னை மரங்களை நாசமாக்கியது.
இதையடுத்து நேற்று காலை மணிகண்டன் என்பவர் அங்கு சென்று பார்த்த பொழுது வாழைகள், தென்னைகள் நாசமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வன அலுவலரிடம் இதுபற்றி அவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து தோட்ட உரிமையாளர் மணிகண்டன் கூறியதாவது, சென்ற வருடம் யானைகள் தோட்டத்தில் புகுந்து வாழை, தென்னை என இரண்டு முறை சேதப்படுத்திய நிலையில் அதற்கே இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.
தற்பொழுது யானைகள் மீண்டும் வாழைகளை சேதப்படுத்தி இருப்பதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு இருக்கின்றது. ஆகையால் வன விலங்குகள் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.