விளையாடடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தாஸ்.அவரது மகன் நரேன் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிகள் விடுமுறை விட்டதால் நண்பர்களுடன் விளையாட செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது காற்றாடி அங்குள்ள உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கியது. அந்த காற்றாடியை எடுக்க முயலும்போது நரேன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அதைக் கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டன.
அவர்களது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மின்சாரம் தாக்கி மயங்கிக் கிடந்த சிறுவனை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் நரேன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த தகவல் அறிந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.